ரூ.ஒரு கோடி ‘பம்பர் பரிசை’ வெல்லப்போவது யாரு?....மத்தியஅரசின் குலுக்கல் திட்டம் இன்று தொடக்கம்

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துதல், இ-வாலட், வங்கிக்கணக்குபரிமாற்றம் உள்ளிட்ட டிஜிட்டல் மேமெண்ட்டை ஊக்கப்படுத்த நிதிஅயோக்அறிவித்த ரூ. ஒரு கோடி வரை பரிசுகள் திட்டம் இன்று தொடங்குகிறது.

மக்களுக்கான லக்கி கிரஹாக் யோஜனா மற்றும் வியாபாரிகளுக்கான டிஜி தன் வியாபார் யோஜனா என்ற இரு திட்டம் 100 நகரங்களில், அடுத்த 100 நாட்களுக்குசெயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் கிறிஸ்துமஸ் தினமான இன்று ( 25-ந் தேதி முதல்), தொடங்கப்பட்டு, டிஜிட்டல் பேமெண்ட்டை பயன்படுத்தும் மக்களுக்கும், ஊக்கப்படுத்தும் வர்த்தகர்களுக்கும் நாள்தோறும், வாரந்தோறும் ரொக்கப்பரிசுகளையும், மெகா பரிசும் வழங்கப்படுகிறது.

வாரத்துக்கு யார் அதிகமாக டிஜிட்டல் பேமெண்ட் அதாவது மின்னணு பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார்களோ, அதாவது, காய்கறி வாங்குவது முதல் ஓட்டலில் சாப்பிடுவது வரை, ரெயில் டிக்கெட் வாங்குவது முதல் வீட்டுக்குதேவையான பொருட்கள் வாங்குவது என அனைத்தையும் டெடிபிட், கிரெடிட், இ-வாலட்டுக்கள் மூலம் அதிகமாக பரிமாற்றம் செய்யும் மக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பரிசுக்காக ரூ.125 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது.

இதற்காக, மக்களுக்காக "லக்கி கிரஹாக் யோஜனா" திட்டமும், வர்த்தகர்களுக்காக "டிஜி தன் வியாபாரி யோஜனா" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பரிசுத்திட்டம்

மக்களுக்கான "லக்கி கிரஹாக் யோஜனா" திட்டத்தின்படி, இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதிவரை நாள்தோறும் 15 ஆயிரம் மக்களுக்கு ரூ.1000 வீதம் பரிசுகள் அளிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் வாரப்பரிசாக 7 ஆயிரம் பேருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ந் தேதி வரை வழங்கப்படும்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி மெகா பரிசான ரூ. ஒரு கோடி பரிசு அறிவிக்கப்படும். 2-வது பரிசாக ரூ.50 லட்சமும், 3-வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.

வர்த்தகர்களுக்கு.......

டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வர்த்தகர்களுக்கு டிஜி தன் வியாபாரியோஜனா திட்டத்தின் கீழ் வாரந் தோறும் 7 ஆயிரம் வர்த்தகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மெகா பரிசான ரூ. ஒரு கோடி பரிசு அறிவிக்கப்படும். 2-ம் பரிசாக ரூ.50 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 5லட்சமும் அறிவிக்கப்படும்.

இந்த பரிசு திட்டத்தின் படி அனைத்து மக்களும், வர்த்தகர்களும் குறைந்தபட்சம் ரூ. 50 முதல் ரூ. 3 ஆயிரம் வரை அனைத்து பரிமாற்றத்தையும் டிஜிட்டல்பேமெண்ட்டாக செலுத்த வேண்டும். ரூ.50-க்கு குறைந்தாலோ அல்லது ரூ. 3 ஆயிரத்துக்கு அதிகமான பரிமாற்றத்துக்கு இது பொருந்தாது.

இந்த பரிசு திட்டத்தில் தேர்வாகும் மக்கள், வர்த்தகர்கள், ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் பரிசு பெற மக்கள், USSD, AEPS, UPI and RuPay Cards ஆகியவை மூலமே பரிமாற்றத்தை மேற்கொண்டு இருக்க வேண்டும். வர்த்தகர்கள், பாயின்ட்ஆப் சேல் மெஷின்(ஸ்வைப்பிங் மெஷின்) மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

அதேசமயம், இது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு செய்யும் பணப்பரிமாற்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆகியோர் டெல்லியில் இன்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றனர்.