ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்டா வகை தொற்று பரவலே இன்னும் முழுமையாக ஒழியாத நிலையில், கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.

இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்த அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, கொரோனா கிருமியைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்கள், மூன்றாவது டோஸை தாராளமாக செலுத்திக் கொள்ளலாம் என, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தும், கொல்லப்பட்ட கொரோனா வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த டிச.9 ஆம் தேதி அன்று சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, தேவைப்பட்டால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு நேற்று ஆலோசனை மேற்கொண்டது. அதில், கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கக்கோரி, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.