சேலத்தில் உள்ள சேலம் உருக்காலையின் கணிசமான பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம், ஒட்டுமொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சேலம் உருக்காலை இழப்பில் செயல்பட்டு வருவதால் அதை தனியாருக்கு விற்பனை செய்யப் போவதாக தகவல்கள் வௌியாகின. இதை தனியாருக்குவிற்பனை செய்யக்கூடாது என்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் அதிமுக எம்.பி. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி பேசி இருந்தார்.

இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய உருக்குத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் பதில் அளித்துப் பேசினார். அவர் கூறியதாவது-

நாட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்த உருக்காலையான சேலம் உருக்காலை, கடந்த சில ஆண்டுகளாக  மிகவும் மோசமாக, இழப்பில் செயல்பட்டு வருகிறது என்பதை அதன் கடந்த சில ஆண்டுகள் வருவாய் விவரங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

ஆதலால், சேலம் உருக்காலையின் குறிப்பிடத்தக்க, கணிசமான அளவு பங்குகளை மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டம் இல்லை.

இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த சட்ட ஆலோசகர்கள், ஆய்வாளர்கள் சேலம் உருக்காலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையைப் பொருத்து உருக்காலையின் எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் உருக்காலையில் ஆண்டுக்கு 3.39 லட்சம் மெட்ரிக் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் மிகச்சிறந்த உருக்காலையில் ஒன்றாகத் திகழ்கிறது.

சேலம் உருக்காலையின் பயன்பாடுத்தப்படும் மின்சாரம், மின் கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றால் 46 சதவீதம் இழப்பில் செயல்பட்டு வருகிறது. ஆதலால், சேலம் உருக்காலைக்கு தேவையான மின்சாரத்தை நியாயமான, விலையில் வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.