ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடக்கும்ம் போராட்டங்களை கண்டு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி காளைகளை காட்சி படுத்துதல் பட்டியலில் இருந்து மத்திய அமைச்சகம் நீக்கியது.பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.உச்சநீதிமன்றமும் அதை உறுதிபடுத்தியது.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழகத்தின் விவசாய உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி தொழிலில் ஆதிக்கத்தை செலுத்த அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே ஜல்லிகட்டுக்கு எதிரான தடை என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் கடந்த ஒருவர காலமாக பேஸ்புக்,வாட்ஸ்-அப்,டுவிட்டர் போன்ற வலைதளங்களில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இளைஞர்கள் மாணவர்கள் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள்  அரசியல் கட்சிகள் அழைக்காமலே தன்னெழுச்சியாக லட்சக்கணக்கில் போராட்டத்தில் குதித்தனர்.

இது தமிழகத்தை மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

மத்திய அரசு உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தப்பிக்க முடியாது.

உடனடியாக அவசர சட்டம் மூலம் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் வைத்துள்ளன.

மேலும் இந்த விவகாரத்தில் இன்று தமிழக பாஜக தலைவர்கள் மேலிடத்தில் கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் காவிரி நீர் விவகாரத்திலும் செல்லாத நோட்டு விவகாரத்திலும் பாஜகவின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.

பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.

இதை உணர்ந்த மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சற்று கீழிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தனது நிலையை மாற்றி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்ன்றன.

இதையடுத்து இன்றோ நாளையோ இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது