பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் காசநோயை கண்டறிவதற்கான சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் கடந்த ஆண்டு மதுவிலக்கு கொள்கை அமல் படுத்தப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் மதுவிற்பனை இல்லை. இது அந்த மாநிலத்தில் விபத்துக்கள் குறைய வழிவகுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், அது காசநோய் மருத்துவ பரிசோதனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சனையால் மருத்துவமனைகளில் மதுவை அனுமதிக்கக் கோரி மாநில அரசுக்கு மத்திய அரசே கடிதம் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து மத்திய மருத்துவ சேவைத்துறை இயக்குனர் ஜெகதீஷ் பிரசாத் கூறியிருப்பதாவது-

காசநோயை கண்டறிய ஆய்வு செய்யும் சோதனை நடத்த எத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. பீகாரில் மது விலக்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைகளில் போதுமான அளவு எதில் ஆல்கஹால் கிடைப்பதில்லை.

இதனால் காசநோய் சோதனைகளைச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் மருத்துமனைகளில் சோதனைக்கூடங்களில் ஆல்கஹால்களைப் பயன்படுத்த விலக்கு அளிக்கவேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளோம்.

மேலும் மருத்துவ சோதனைக்கு போதுமான ஆல்கஹால் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளில் போதுமான ஆல்கஹால் கிடைக்க வகைசெய்தால்தான் காசநோயை உடனடியாக கண்டறிந்து சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.