கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படாமல் இருக்கும் பி.எப். கணக்குக்கு வட்டி வழங்கப்படாமல் இருந்த நிலையில், இனி 8.8 சதவீதம் வட்டி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாரேயா நேற்று கூறுகையில், “ கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இல்லாத பி.எப். கணக்குக்கு வட்டி வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவுரையின் பேரில் இனி 8.8 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்து இட்டுவிட்டேன். இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதன் மூலம், 9.70 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இது அவர்களுக்கு தீபாவளிப்பரிசாக அமையும்.
செயல்பாட்டில் இல்லாத பி.எப். கணக்குகளில் ஏறக்குறைய ரூ.42 ஆயிரம் கோடி இருக்கிறது. செயல்படாத கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படாமல் இருப்பதால்தான் மக்கள் அந்த பணத்தை எடுக்கிறார்கள். அதற்கு வட்டி வழங்கப்படும் பட்சத்தில் அந்த பணத்தை எடுக்கமாட்டார்கள். இது பாதுகாப்பான முதலீடாகும். இன்று இல்லாவிட்டாலும், நாளை நிச்சயம் நாம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போது ஒருவருக்கு இரட்டை கணக்கு இருப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் வட்டி வழங்கும் பணி தொடங்கும்.'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து 36 மாதங்கள் ஒரு பி.எப். கணக்கு செயல்பாட்டில் இல்லாமல் இருந்தால், அது செயல்படாத பி.எப். கணக்கு என்று கூறப்படுகிறது.
