கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தொடருங்கள்... மத்திய அரசு அறிவுறுத்தல்!!
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் சீனாவில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. அங்கு கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் டெல்டாக்ரான் என்னும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் அலை இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நான்காம் அலை ஜூன் மாதம் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் உருமாற்றத்தின் காரணமாக அடுத்தடுத்து திரிபுகள் வந்துகொண்டே இருக்கின்றன. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான்ன், டெல்மிக்ரான் என திரிபுகள் வந்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் புதிய வகை திரிபு ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கிய போது பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் கூட உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தன. இதேபோல் ஏறிய வேகத்தில் மூன்றாம் அலை இறங்கியது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு கீழேயே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 149 பலியான நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,16,281 ஆக உள்ளது. இந்நிலையில்,தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவரபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.