central govt
தீவிரவாத செயல்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது….மத்தியஅரசு பெருமை
கடந்த ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு பின் தீவிரவாத செயல்கள் 25 சதவீதம் குறைந்துள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், “ கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு பின், தீவிரவாத சம்பவங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 193 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
2016, அக்டோபர் 1-ந் தேதி முதல் 2017 மார்ச் 31-ந் தேதி வரை 155 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் மீது கல்வீசும் சம்பவங்களும் படிப்படியாக குறைந்துள்ளது.
கடந்த 2016ம்ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 2 ஆயிரத்து 325 கல்வீசும் சம்பவங்கள் நடந்துள்ளன. அது 2016, அக்டோபர் முதல் 2017 மார்ச் வரையிலான 6 மாதங்களில் 411 ஆக குறைந்துவிட்டது.
மேலும், கடந்த ஆண்டில் இந்திய எல்லைக்குள் 371 முறை தீவிரவாதிகள் ஊடுறுவல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 217 தீவிரவாதிகள் இந்தியப்பகுதிக்குள் ஊடுறுவிய நிலையில், அதில் 118 பேர் மட்டுமே இந்திய பகுதிக்குள் வந்தனர்.
2017ம் ஆண்டு பிப்ரவரி வரை 43 தீவிரவாத ஊடுறுவல்கள் நடந்துள்ளன. 9 தீவிரவாதிகள் ஊடுறுவியநிலையில், 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர், 30 பேர் பாகிஸ்தானுக்கு திரும்பினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
