Central government will soon announce for hotel restaurant shopping malls
ஓட்டல், ரெஸ்டாரண்ட், ஷாப்பிங் மால்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி.(குறைந்தபட்ச சில்லரை விலை)விலையோடு சரக்கு மற்றும் சேவை வரியையும் (ஜி.எஸ்.டி.) சேர்த்து விற்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜி.எஸ்.டி. கவுன்சில்
அசாம் மாநில நிதி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் குழு இந்த யோசனையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. நவம்பர் 10-ந்தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
புகார்கள்
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்தபின், கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி.க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்களிடம் இருந்து ஜி.எஸ்.டி. அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
எம்.ஆர்.பி. விலை என்பதே இறுதிக்கட்ட சில்லரை விலையாகும், இதற்கு அதிகமாக விலை வைத்து சில்லரையில் விற்பனை செய்யக்கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும், அவ்வாறு விற்பனைசெய்வதை குற்றமாகக் கருத வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கட்டாயம்
இதையடுத்து, ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், ஷாப்பிங் மால்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் எம்.ஆர்.பி. விலையோடு, ஜி.எஸ்.டி.வரியும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி அதே சமயம், எம்ஆர்.பி. க்கு அதிகமாக விலை செல்லக்கூடாது என்ற அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.
