ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய டீ, வாட்டர் கிளாஸ், கேரிபேக், பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்டிரா போன்ற பொருட்களால் குவியும் கழிவுகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. அதனால் பருவநிலை மாற்றம், சுகாதார கேடும் உருவாகிறது. உலக முழுவதும் உள்ள நாடுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் தீவிரமாக உள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடியும் தனது சுதந்திர தின உரையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் மிகப் பெரிய புதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்தார். மேலும் தனது மன் கி பாத் நிகழ்ச்சியிலும் இது குறித்து பேசி இருந்தார். பிரதமர் மோடியின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ரயில்வே முதலில் தனது அலுவலகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் செய்யப்படும் என அறிவித்தது.

மேலும் பல தனியார் நிறுவனங்களும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை இல்லாமல் செய்வோம் என அறிவித்து அதற்கான நடவடிக்கையிலும் களம் இறங்கி விட்டன. இந்நிலையில், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2ம் தேதி தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.