வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில்தலைமறைவாக இருக்கம் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கு தேவையான ஆவணங்களை சட்ட நிறுவனத்திடம் மத்திய அரசு அதிகாரிகள் அளித்துள்ளனர் எனச் செய்திகள் தெரிவித்தனர்.

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார். அவரின் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். பல்வேறு நிதி மோசடி வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதால், நீதிமன்றம் மல்லையாவே தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் இங்கிலாந்து அரசிடம் பேச்சு நடத்தியது. அதன் விளைவாக  கடந்த ஏப்ரல் 18-ந்தேதி ஸ்காட்லாந்து யார்டுபோலீசாரால் மல்லையா கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனிலும் விடுதலையானார்.

இந்த வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மல்லையா தொடர்பான வழக்கை லண்டனில் உள்ள கிரவுண் சட்ட நிறுவனம் செய்து வருகிறது. கடந்த 6-ந்தேதி மல்லையா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எம்மா லூசி ஆர்புத்நாட் பிறப்பித்த உத்தரவில்,  ஜூலை 31-ந்தேதிக்குள் மல்லையா தொடர்பான ஆவணங்களை இந்திய அதிகாரிகள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அடுத்த கட்ட விசாரணையையும் செப்டம்பர் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான ஆவணங்களை கிரவுண் சட்ட நிறுவனத்திடம் மத்திய அரசு அதிகாரிகள் அளித்துள்ளனர் எனச் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கிரவுண் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் மார்க் சம்மர்ஸ் கூறுகையில், “ மல்லையா தொடர்பான ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து இருக்கிறோம்.  இந்த வழக்கில் இந்திய அதிகாரிகளிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.  இறுதிக்கட்ட விசாரணை டிசம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது’’ என்றார்.