கடந்த 2016ம் ஆண்டில் நாட்டில் 11 ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

விவசாயிகள் பிரச்சினை குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி. ஜோதிர்தயா சிந்தியா பேசுகையில், “விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையை மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. இதனால் விளைபொருட்களை நஷ்டத்துக்கு விற்கவேண்டிய நிலையை எண்ணியும், கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்தனர்’’ என்று குற்றம்சாட்டினார்.  

இதற்கு பதில் அளித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பேசினார். அவர் கூறியதாவது-
தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரங்கள் படி கடந்த 2016ம் ஆண்டில் நாட்டில் 11 ஆயிரத்து 400 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு 12 ஆயிரத்து 602 பேர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அவர்களின் வருவாயை உயர்த்துவதால் மட்டுமே முடியும் அதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்துவருகிறது.பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கி உள்ளது. 
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு 1.5மடங்கு விலையை அதிகரிப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். 

மேலும், விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ, 3 ஆயிரத்து 560கோடியை அரசு செலுத்தி உள்ளது. ரூ.3 ஆயிரத்து 548 கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க பயிர்களுக்கு காப்பீடு செய்யக்கோரி, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.