இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, ஊரடங்கு காலத்தில் ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
இலவச தானியங்கள் - பிரதமர் அறிவிப்பு :
கடந்த 2020 மார்ச் மாதம், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் பல்வேறு காரணங்களால் நீட்டிக்கப்பட்டது.மக்களின் இயல்வு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது வாழ்வாதாரம் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் அறிவிக்கப்பட்ட இந்த பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் சுமார் 80 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. கூடுதல் தானியங்களையும் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு வழங்குகிறது.
இலவச தானியங்கள் :
இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இலவச ரேசன் திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இலவச ரேசன் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் வரை இலவசம் :
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகளின் உணவு தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் 6 மாதங்களுக்கு (செப்டம்பர் 2022) வரை ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்திற்காக 2.60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 6 மாதங்களில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 3.40 லட்சம் கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
