கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேஸ்புக் பயன்பட்டாளர்களின் தகவல்களைத் திருடியதாக கூறப்படுவதை அடுத்து மத்திய அரசு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம் வெற்றி பெற, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது என பிரிட்டன் செய்தி சேனல் 4 செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சிஇஓ நிக்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்காக தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கேம்பிரிட்ஜ்
அனாலிடிகா நிறுவனத்தின் சிஇஓ நிக்ஸ், எதிர்கட்சி தலைவர்களைச் சந்தித்தார் என்று கூறினார். இது இந்திய அரசிய்ல கட்சிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்திய பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதா? அதற்காக அவர்களது அனுமதி பெறப்பட்டதா?, அப்படி என்றால் எந்த நிறுவனத்துக்கு தகவல் பயன்படுத்தப்பட்டது?,  அந்த நிறுவனங்கள் எவ்வாறு தகவல்களைப் பெற்றன? பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் எத்தகைய வகையில் பயன்படுத்தப்பட்டது?,  என்பது உள்ளிட்ட 6 கேள்விகளுக்கு பதில்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த கேள்விகளுக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் மத்திய அரசு அதில் கூறியுள்ளது. இது தொடர்பான விவரங்களைத் தர மறுத்தால் சட்ட ரீதியான
நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.