Central Government as a measure to encourage digital exchange of people

ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவாக கிரெடிட், டெபிட் கார்டுகள், ‘பிம்’, ‘யு.பி.ஐ.’ ஆப்ஸ் மூலம் செய்யப்படும்டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு எம்.டி.ஆர். (மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணம் வசூலிக்கப்படாது. ஜனவரி 1ந்தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இது கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எம்.டி.ஆர். இல்லை

அதாவது, டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, வர்த்தகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் எம்.டி.ஆர்.(வர்த்தகர் கழிவு தொகை) அடுத்த 2 ஆண்டுகளுக்கு வசூலிக்கப்படாது.

மக்களிடத்தில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு இதை அறிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது-

2 ஆண்டுகளுக்கு இல்லை

கிரெடிட், டெபிட், யு.பி.ஐ. போன்ற ஆப்ஸ் மூலம் ரூ. 2 ஆயிரம் வரையிலான டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, வர்த்தகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வசூலிக்கப்படாது. இந்த முறை வரும் ஜனவரி 1ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும்.

ரூ.2,512 கோடி செலவு

இந்த கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டு வங்கிகளுக்கு செலுத்தும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 512 கோடி செலவாகும்.

ஊக்குவிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் வரையிலான டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, வர்த்தகர்களும், நுகர்வோர்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலும், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த பணப்புழக்கத்துக்கு மாறுவார்கள் என அரசு நம்புகிறது.

இந்த கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நிதி அமைச்சகத்தின் கீழ்வரும் நிதிச்சேவையின் செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளர், என்.பி.சி.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.