2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் நடைபெற்ற பேரணியைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:-

தேசிய அளவில் அனைத்து தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய அளவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களையும், கர்நாடகத்தில் 13 லட்சம் புதிய உறுப்பினர்களையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில் சேர்த்துள்ளோம்.

கர்நாடகத்தில் தொழிலாளர் நலத் துறைக்காக 17 அலுவலகங்கள் உள்ளன. அதில் 5 அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன. பல்லாரி, ராய்ச்சூரில் விரைவில் புதிய அலுவலகங்கள் தொடங்கப்படும்.

தேசிய அளவில் அதிக அளவிலான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, சமூகநீதியைக் காத்து வரும் துறையாக தொழிலாளர் நலத் துறை உள்ளது. அண்மைக்காலமாக இணையதளம் மூலம் தொழிலாளர்களின் நல நிதியை அனுப்பும் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

2022-ஆம் ஆண்டுக்குள் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.