உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு 1251 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 32ஐ எட்டியுள்ளது .இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் இதுவரை 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஒருவர் பலியாகியுள்ளார். அதற்கடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் 198 பேர் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே அதிகமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நகரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு கூறியிருக்கிறது.

அதன்படி 1. தில்ஷாத் கார்டன், டெல்லி
2. நிஜாமுதீன், டெல்லி
3. பத்தனம்திட்டா, கேரளா
4. காசர்கோட், கேரளா
5. நொய்டா, உத்தரப்பிரதேசம்
6. மீரட், உத்தரப்பிரதேசம்
7. பில்வாரா, ராஜஸ்தான்
8. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
9. மும்பை, மகாராஷ்டிரா
10. புனே, மகாராஷ்டிரா
11. அகமதாபாத், குஜராத்
12. இந்தூர், மத்திய பிரதேசம்
13. நவன்ஷஹர், பஞ்சாப்
14. பெங்களூரு, கர்நாடகா
15. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
16. ஈரோடு, தமிழ்நாடு ஆகிய 16 இடங்களை பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தமாக தமிழ்நாட்டில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.