முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்கு செல்பவர்களுக்கான மானியத்தை குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹஜ் பயணமாக, நம் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் சென்று வந்தனர்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான இந்தியர்கள் எண்ணிக்கையை 1 லட்சத்து 70 ஆயிரத்து 520 ஆக சவுதி அரோபியா அரசு நேற்றுமுன்தினம் உயர்த்திய 2 நாட்களுக்குள் மானியத்தை அரசு குறைத்துள்ளது.

இதன் மூலம் இந்தாண்டு இந்தியாவில் இருந்து கூடுதலாக 34 ஆயிரத்து 500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில், மானியக் குறைப்பை மத்தியஅரசு செய்ய உள்ளது.

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இது நடுத்தர முஸ்லிம்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

இந்த மானியம் செலவால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி வரை செலவு ஏற்படுகிறது. இந்த மானியத் தொகை ஒதுக்கீடு பற்றி கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை வெளியிட்டது.

ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் ரூ.650 கோடி மானியத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் அந்த மானியம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

உதவிதேவையில்லை

இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ- இத்திகா துல் முஸ்லிமான் கட்சி தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் உவைசி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு வழங்கும் ஹஜ் மானியம் முஸ்லிம்களுக்கு தேவை இல்லை.

அந்த மானியப் பணத்தில் ரூ.450 கோடி இந்திய விமான நிறுவனங்களுக்குதான் செல்கிறது. அதை முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுங்கள்.பெண் குழந்தைகளுக்காக பள்ளிகளையும், விடுதிகளையும் ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு உதவித்தொகையாக அளியுங்கள்.இந்தியாவையும், முஸ்லிம்சமூகத்தையும் வலிமையாக்குவோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.