கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குக.. எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.. 5 மாநிலங்களுக்கு புது உத்தரவு..
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறைந்து படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கும் படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறைந்து படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கும் படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டைநாடான சீனாவில் தற்போது பிஏ.2 என்ற ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதனால் மாநிலங்களில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
டெல்லி, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கொரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில் குஜராத்திலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே மத்திய பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் பூஷன், 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், "மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடின்றி அனுமதியளித்துள்ள நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் 13.45 % யிலிருந்து 15.53% ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் புதிதாக 2,321 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் 31.8 சதவீதம் ஆகும். அதே போல் மகாராஷ்டிராவில் புதிதாக794 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் 10.9% பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.39%ல் இருந்து 0.43% ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் டெல்லியில் கடந்த வாரம் புதிதாக 826 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் கடந்த வாரம் 814 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பரவல் விகிதம் 14.38%ல் இருந்து 16.48% ஆக அதிகரித்துள்ளது. ஹரியாணாவில் முந்தைய வாரம் 367 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இந்த வாரம் புதிதாக 417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 1.06% ஆக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்கள் கோரோனா பரிசோதனை, பரவல் தொடர்பு கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கோரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு இந்த 5 மாநிலங்களுக்கும் மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது.