பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்றதன் ஐம்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஜெனரல் பிபின் ராவத் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடபட்டது. இந்த உரை ஹெலிகாப்டர் விபத்து நேர்வதற்கு ஒரு நாள் முன்பு டிசம்பர் 7 ஆம் தேதி எடுக்கபட்டது என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

அந்த வீடியோவில், பாகிஸ்தானுடனான போரில் உயிர்தியாகம் செய்த இந்தியப்படையினருக்கு அஞ்சலி செலுத்துவதாக பேசியுள்ளார். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு இந்திய இராணுவம் வெற்றி பெற்றதை எண்ணி நமது படைகளை பற்றி பெருமிதம் கொள்ளுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் காட்டேரி மலைப்பகுதியில் செல்லும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. 

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் அனுப்பப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அவர்களின் மகள்கள் க்ரித்திகா, தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகள் செய்து உடல்களுக்கு தீமூட்டினர். 

இதற்கிடையே நாடு முழுவதும் மக்கள் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்றதன் ஐம்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஜெனரல் பிபின் ராவத் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடபட்டது.