காவிரி நதி நீர் பிரச்சினை: மேகேதாட்டு தான் தீர்வு - டி.கே.சிவக்குமார்!
காவிரி நதி நீர் பிரச்சினைக்கு மேகேதாட்டு அணைதான் ஒரே தீர்வு என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்
கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே, காவிரி நீர் வரத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தாலும் கர்நாடக அரசு அதனை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரங்களில் கர்நாடகாவை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதாக கூறுகிறார்கள்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் காவிரி நதி நீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும், தமிழகத்துக்கான நீர் வரத்தை கர்நாடகம் தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.
அதேபோல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது. இருப்பினும், மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகம் விடாப்பிடியாக இருக்கிறது. அண்மையில்கூட, கர்நாடக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகேதாட்டுவில் அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பாக பிரச்சினை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரையும் கர்நாடகா வழங்கவில்லை. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா? பின்னணி என்ன?
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இதுகுறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, காவிரி ஆற்றில் இருந்து 10,000 கன அடி நீரை அம்மாநில அரசு திறந்து விட்டது. இதனிடையே, நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், 7200 கன அடி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, நாளொன்றுக்கு 3000 கன அடி நீரே திறக்க முடியும் என வாதிட்டது. தொடர்ந்து, 5000 கனஅடி தண்ணீர் வீதம் செப்டம்பர் 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதையும் ஏற்க மறுத்த கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில், சட்ட வல்லுநர்களுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “அனைத்து சட்ட வல்லுனர்களையும் இன்று சந்தித்து பேசினோம். தற்போது, கர்நாடகா சார்பில் ஆஜராகியுள்ள எங்கள் மூத்த வழக்கறிஞரை சந்திக்க ஒட்டுமொத்த குழுவும் சென்று கொண்டிருக்கிறது. 5,000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் இல்லாதது கர்நாடகாவுக்கு பெரும் வேதனையாக உள்ளது. மழை இல்லை. கர்நாடகாவின் உணர்வுகளுக்கும் விவசாயிகளுக்கும் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழக விவசாயிகளையும் மதிக்கிறோம். ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு மேகேதாட்டுதான். அதுதான் எங்களது வேண்டுகோளும் கூட. மேகேதாட்டு என்பது கர்நாடகாவுக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கும் உதவும்.” என தெரிவித்துள்ளார்.