உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி உயர்மட்ட தொழில் நுட்பக் குழு தலைவர் ஜி.எஸ். ஷா, தலைமையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆய்வு நடத்தியது. 

தமிழகத்தில் மேட்டூர் அணை, பவானி அணை, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. அதேபோல், கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்பிடிப்பு, பாசன பகுதிகளிலும் தொழில்நுட்பக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் காவிரி உயர்மட்ட குழு தலைவர் ஜி.எஸ். ஷா இன்று தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கர்நாடகா, காவிரியில் இருநது தமிழகத்துக்கு எவ்வளவுளவு நீரை திறந்துவிட வேண்டும் என்பது குறித்து எந்த பரிந்துரையும் அறிக்கையில் இடம் பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மற்றும் தமிழக அணைகளின் நீர்மட்டம் குறித்து மட்டுமே ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.