அனைத்து ரெயில்களில் செயல்படும் சமையல்கூடத்துடன் கூடிய கேட்டரிங்சேவை அனைத்தும் இந்த ஆண்டுக்குள் ஐ.ஆர்.சி.டி.சியிடம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட உள்ளது.

உணவின் தரத்தில் ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, தரத்தை  மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து ரெயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட் கூறுகையில், “ இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து ரெயில்களிலும் சமையல் கூடத்துடன் கூடிய கேட்டரிங் சேவை, ஐ.ஆர்.சி.டி.சி. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 

இப்போது 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கேட்டரிங் கொள்கையின் படி, மண்டல ரெயில்வே நிலையங்கள் கட்டுப்பாட்டில் கேட்டரிங் சேவை நடத்தப்பட்டு வருகிறது.

ஏறக்குறைய ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட 350 வகையான ரெயில்களில் கேட்டரிங் வசதியுடன் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து ரெயில்களிலும் கேட்டரிங் சேவையை மேம்படுத்தும் நோக்கில், ரெயில்சமையல்கூடம், பேன்ட்ரி கார், உணவு விற்பனைக் கூடம் ஆகியவை மூன்றாம் நபர் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

இந்த தரச்சோதனை நடத்துவதற்காக 2 மிகப்பெரிய, மதிப்பு மிக்க நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். இந்த மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் உணவுக்கூடங்கள், பேன்ட்ரி கார்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள்.

தற்போது ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரெயில்களில் செல்வோர் கண்டிப்பாக கேட்டரிங் சேவையை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி, பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப கேட்டரிங் சேவையை தேர்வு செய்யலாம் அல்லது கேட்டரிங் சேவை இல்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையே ரெயில்வேயில் கடந்த 2005ம் ஆண்டு கேட்டரிங் கொள்கை உருவாக்கப்பட்டு, அனைத்து ரெயில்களிலும் கேட்டரிங் சேவைக்கு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனமே பொறுப்பாக ஆக்கப்பட்டது.

ஆனால், 2010ம் ஆண்டு ரெயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி வந்தபோது, இந்த கேட்டரிங் கொள்கையை மாற்றி அமைத்தார். அதன்படி கேட்டரிங் பொறுப்பு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் இருந்து எடுக்கப்பட்டு, மண்டல ரெயில்வே அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உணவு மற்றும் கேட்டரிங் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய கேட்டரிங்கொள்கையை கடந்த பிப்ரவரி மாதம் வௌியிட்டார். இதன்படி கடுமையான விதிமுறைகளும், வழிநாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன. இதன்படி, சமையல் செய்யும் இடமும், உணவு பகிர்மானமும் தனித்தனியாக பகுக்கப்பட்டன.