ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் சம்பய் சோரன் அறிவிப்பு!
ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார்
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்பதால், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது.
அந்த வகையில், பீகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்: தமிழக வெற்றிக் கழகம்!
இந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பய் சோரன் உத்தரவிட்டுள்ளார். இந்த வரைவு விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், கணக்கெடுப்பு தொடங்கும். அநேகமாக, மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்தாற்போல் ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.