நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை: நாளை ஆஜராகும் மஹுவா மொய்த்ரா!
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக்கூறி, நாடாளுமன்றா ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் மற்றும் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரின் வாக்குமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று (நேற்று) ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட வேலைகள் நவம்பர் 4ஆம் தேதி வரை இருப்பதால், நவம்பர் 5ஆம் தேதி ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் மூலம் கோரியிருந்தார். ஆனால், நவம்பர் 2ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும், அதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது எனவும் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு நவம்பர் 2ஆம் தேதி (நாளை) ஆஜராக உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். அதேசமயம், பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டிய தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தானியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான வினோத் குமார் சோங்கருக்கு எழுதிய கடிதத்தில், நவம்பர் 2 ஆம் தேதி குழு முன் ஆஜராவதாக மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க இது சரியான மன்றமா என்றும் அந்த கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.டி.எப் வாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்!
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக் கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இணையதள கணக்கின் முகவரியையும், அதன் கடவுச்சொல்லையும் தம்மிடம் பகிர்ந்ததாகவும் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார். இதற்கு பிரதிபலனாக மஹுவா மொய்த்ராவுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மஹுவா மொய்த்ரா, அதிகார அமைப்புகளை காட்டி தர்ஷன் ஹிராநந்தானியின் தொழிலை முடக்கி விடுவதாக பாஜகவினர் மிரட்டி இதுபோன்று சொல்லச் சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.