ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் ஆகியோரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான கமல்நாத் அடுத்த சிக்கலில் மாட்டிக் கொள்ள உள்ளார். 

1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவர சம்பவத்தில் தொடர்பாக மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் மீதான வழக்கை மீண்டும் கையில் எடுக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை டெல்லியைச் சேர்ந்த ஷிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ. மஞ்சீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அகாலிதளத்திற்கு ஒரு பெரிய வெற்றி. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதில் கமல்நாத் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளை எஸ்ஐடி மீண்டும் விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு நான் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் கமல்நாத்துக்கு எதிரான சமீபத்திய ஆதாரங்களை கருத்தில் கொண்டு வழக்கு எண் 601/84 ஐ மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விரைவில் கமல்நாத் நான் சிறையில் சந்திக்க உள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

"வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்த எஸ்ஐடிக்கு நன்றி. கமல்நாத் சீக்கியர்களைக் கொன்றதை நேரில் பார்த்தவர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர்கள் முன் வந்து சாட்சிகளாக மாறுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். பயப்படத் தேவையில்லை’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கமல்நாத் மீதான வழக்கும் மீண்டும் உள்துறை அமைச்சகம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதால், ஒருவேளை அவர் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டால், அவர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவரது முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகலாம்.

முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி சிவகுமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து காங்கிரசின் முக்கிய புள்ளியாக கருதப்படும் கமல்நாத்துக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. அதேபோல் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த நிலையில் கமல் நாத்துக்கு பாஜக குறிவைத்துள்ளது.