குழந்தைக்கு பாலூட்டும் படம் மலையாள பத்திரிகை ஒன்றில் வெளியானதை அடுத்து, அந்த பத்திரிகையின் பதிப்பாசிரியர் மீதும், எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீதும் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மாதம் இரு முறை வெளியாகும் கிரிகலட்சுமி என்ற இதழின் அட்டைப்படத்தில், தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் வகையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொது வெளியிடங்களில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு போஸ் கொடுத்துள்ளார்.

மலையாள இதழியல் வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற துணிச்சலான போட்டோ ஒன்று அட்டைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜிலு ஜோசப்பின் அட்டைப் படத்தை பார்த்து ஏன்? என்று கேள்வி எழுப்பியவர்கள் கூட, அதன் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை பாராட்டி வருகின்றனர். கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் ஜிலு ஜோசப்புக்கும் பாரட்டுகள் குவிந்து வருகிறது. ஜிலு ஜோசப்பின் இந்த புகைப்படத்துக்கு சிலர் எதிர்ப்பும்
தெரிவித்து வருகின்றனர்

அட்டை படத்தில் இடம் பிடித்த ஜிலு ஜோசப் கூறுகையில், தாய்ப்பால் புகட்டுவது என்பது இயல்பான நிகழ்வு. இது பெண்களுக்கு கிடைத்துள்ள வரம். இதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மீதுதான் தப்பு உள்ளதே தவிர, தாய்ப்பால் கொடுக்கும்போது மறைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதன் நல்ல நோக்கத்தை உணர்ந்துதான், நான் மறு பேச்சு பேசாமல் இதற்கு சம்மதித்தேன் என்று கூறியிருந்தார்.

ஜிலு ஜோசப்பின் இந்த புகைப்படத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிரிகலட்சுமி இதழின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் ஜிலு ஜோசப் ஆகியோர் மீது கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் கிரிகிலட்சுமி இதழில் இந்த படம் இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 16 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது.