Card for the payment pementt Opposition in Rajya Sabha

டெபிட், கிரெட்டி கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் போட்டால், விதிக்கப்படும் கூடுதல் கட்டணம், சேமிப்பு கணக்குகளில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாவிட்டால் அபராதம் ஆகிய விவகாரங்களை மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் நேற்று எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்துக்கு பிந்திய நேரத்தில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பி பேசினார்.

அவர் பேசுகையில்,“ கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி, பெட்ரோல்,டீசல் போட்டால், கட்டணம் விதிக்கப்படாது என்று அரசு உறுதி அளித்தும்கூட, வாடிக்கையாளர்களுக்கு 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏ.டி.எம்.களில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என வங்கிகள் விதிமுறை கொண்டு வந்துள்ளன. சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும் கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன. வங்கிகள் அரசின் ஆலோசனையை ஏற்கவில்லை. இந்த கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.

டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் சீன நிறுவனமான ‘பேடி-எம்’ நிறுவனம் ரூபாய் நோட்டு தடையின் போது 300 கோடி அமெரிக்க டாலர் சொத்துகொண்டதாக இருந்தது, டிஜிட்டல்பரிமாற்றம் வந்தபின் 500 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துவிட்டது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சீதாராம் யெச்சூரி பேசுகையில், “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம். பயன்படுத்தாத காரணத்துக்காக எனக்கு முன்னறிவிப்பு இன்றி, எனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.144 கட்டணம் வசூலித்துள்ளது'' என்று குற்றம்சாட்டினார்.

அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ பேடி-எம் நிறுவனத்துக்கு அரசு ஆதரவு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது'' என்றார்.

உடனே குறுக்கிட்ட அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், “ ஸ்டேட்வங்கி முன் அறிவிப்பு இன்றி அபராதம் வசூலித்த விவகாரத்தை நிதி அமைச்சரிடம் தனிப்பட்ட புகாராக சீதாரம் யெச்சூரி அளிக்கலாம்'' என்றார்.