ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விஷ்ணு தனது குடும்பத்தினர் 5 பேருடன் பெங்களூரு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக திருப்பதியில் இருந்து காரில் கிளம்பி உள்ளார். காரை விஷ்ணுவின் ஓட்டுநர் ஓட்டி வந்திருக்கிறார். திருப்பதி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். கார் சித்தூரை அடுத்த பலமனேரி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டது. சில தூரங்களுக்கு சாலையில் உருண்டபடி சென்ற கார், அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் கார் மளமளவென தீ பிடித்து எரிந்தது.

இதனால் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். கார் முழுவதும் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த விஷ்ணுவின் சகோதரி, மனைவி மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். விஷ்ணு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக  பலமனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.