கேரளாவில் 700 மதுபான பார்-களை முந்தைய காங்கிரஸ் அரசு அடைத்தபோதிலும், மது விற்பனை அதிகரித்திருப்பதாக இப்போதைய மாநில அரசு தெரிவித்துள்ளது.

உம்மன் சாண்டி அரசு

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலத்தை ஆட்சி செய்தது. அப்போது, உம்மன் சாண்டி முதல் அமைச்சராக இருந்தார். மதுவினால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முந்தைய காங்கிரஸ் அரசு 2023-க்குள் மாநில முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தது.

சட்டப் பேரவையில்…

அதன் ஒருபகுதியாக 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்களை தவிர்த்து மாநிலத்தில் இயங்கும் 700 `பார்'-கள் மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பலன் ஏதும் இல்லை என்று தற்போதைய கேரள அரசு தெரிவித்துள்ளது. நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மாநில கலால்துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:- மதுபான `பார்'-களை மூடி காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. 700 `பார்'-களை மூடியும் குடிமகன்கள் குடிப்பது குறையவில்லை.

கள்ளச் சாராயம் அதிகரிப்பு

சட்ட விரோதமாக மதுபானங்கள் மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கள்ளச் சாராயம் அதிளவு மாநிலத்திற்கு கடத்தி வரப்படுகிறது. சுற்றுலாத் துறையின் நலன் கருதி புதிய மதுக்கொள்கையை இடதுசாரி ஜனநாயக முன்னணி ஏற்படுத்தும். மது குடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூரண மதுவிலக்கு என்பது எங்கள் நோக்கம் அல்ல. மாறாக மது குடிப்பதை குறைப்பதுதான் எங்களது திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.