புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்  7 வயது சிறுவனுக்கு, அவனது விருப்பப்படி ஒரு நாள் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வழங்கி மும்பை காவல் துறை பாராட்டுப் பெற்றுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அர்பித் மண்டல், கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அர்பித்தின் ஆசையை மும்பை போலீஸார் நிறைவேற்றியுள்ளனர். அர்பித்தின் லட்சியம் குறித்து கேள்விப்பட்ட மும்பை போலீஸார், அவருக்கென பிரத்யேகமாகத் போலீஸ் சீருடையை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன், மும்பை முலுந்த் காவல் நிலையத்திற்கு ஒருநாள் பொறுப்பாளராகவும் அவரைப் பணியாற்றச் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் மும்பை போலீஸார். 

ஒருநாள் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கும் படிவத்தில் சிறுவன் மண்டல் கையெழுத்திட்டார் . இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு அங்கிருந்த போலீஸார் இனிப்புகளை ஊட்டிவிட்டு மகிழ்வித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் சீருடையில் இன்ஸ்பெக்டராக அர்பித் இருப்பது போன்ற புகைப்படங்களை மும்பை போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மும்பை போலீஸாரின் மனிதநேயமிக்க இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மும்பை போலீஸார், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறது.