மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, காங்கிரஸ் ஆட்சியின்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்றும், அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் காங்கிரஸ் கட்சி, பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகின் கனவு நாயகியும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் விளங்கியவர் ஸ்ரீதேவி. துபாயில் நடைபெற்ற உறவினரின்  திருமணத்திற்கு சென்றிருந்தபோது, ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். 

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தியைக் கேட்டு காங்கிரஸ் கட்சி மிகுந்த வேதனை அடைகிறது. மிகச் சிறந்த நடிகை; திறமையானவர். அவரின் படைப்புகளும், நடிப்பும் காலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நீங்காதிருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். 

கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நடிகை ஸ்ரீதேவிக்கு 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த பதிவைப் பார்த்த ஸ்ரீதேவியின் ரசிகர்கள், ஸ்ரீதேவியின் சாவிலும் அரசியல் செய்வதா? இதுதான் மாண்பா? என்றெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.