Call centre woman killed by young man

பாண்டிச்சேரி அரும்பார்த்தபுரம் ரோஜா நகரை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மகன் உள்ளார். அவர், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கணவன் - மனைவி இருவருமே தனியார் கால் சென்ட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கணவர் காலை ஷிப்டும் , மனைவி தீபா மதிய ஷிப்டு பணியிலும் பணியாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலையில் வீட்டில் இருந்த தீபா அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் எதிர்வீட்டை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கொலை நடந்து நீண்ட நேரம் ஆகியும் அந்த வாலிபரின் வீடு பூட்டி கிடந்தது.

எனவே, சந்தேகம் அடைந்து அவரை தேடினார்கள். நேற்று இரவு அந்த வாலிபர் வீடு திரும்பினார். அப்போது அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் நான்தான் தீபாவை கொலை செய்தேன் என்று கூறினார். அந்த வாலிபரின் பெயர் கிரிதரன். வில்லியனூர் கோட்டை மேட்டை சேர்ந்தவர். அவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

கோட்டை மேட்டில் இருந்து 3 மாதங்களுக்கு முன்புதான் கிரிதரன் குடும்பத்துடன் அரும்பார்த்தபுரம் ரோஜா நகர் வீட்டுக்கு வந்தார். கிரிதரன் குடும்பத்தினரும், தீபா குடும்பத்தினரும் நட்பாக பழகி வந்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு கிரிதரன் குழந்தைக்கு பிறந்த நாள் விழாவிலும் தீபா குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்தான் கிரிதரன் தீபாவை நேற்று கொலை செய்தார். கொலை குறித்து அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது அதிர்ச்சியை அளித்துள்ளது.

நாங்கள் இங்கு குடி வந்ததில் இருந்தே தீபா குடும்பத்தினருடன் நல்ல நட்புடன் இருந்து வந்தோம். நான் ஆன்லைனில் ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் இந்த தொழிலை கவனித்து வந்தேன். கடந்த சில மாதங்களாக நான் முதலீடு செய்த ஷேர் மார்க்கெட் சரியான லாபமில்லை. இதனால் பண முடக்கம் ஏற்பட்டது. எனவே, தீபா வீட்டில் திருடலாம் என்று திட்டமிட்டேன். தீபா வேலைக்கு செல்லும் போது, வீட்டு சாவியை வாசலில் உள்ள மிதியடிக்கு கீழே வைத்து விட்டு செல்வது எனக்கு தெரிந்தது.

ஒரு மாதத்துக்கு முன்பு தீபா வெளியே சென்ற பிறகு அந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் சென்றேன். அங்கிருந்த ஒரு நகையை எடுத்து வந்தேன். அதை விற்று செலவு செய்து விட்டேன். அப்போதே தீபா வீட்டினருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. என்னிடம் வந்து கேட்டார்கள். அதற்கு உங்கள் மாமியார் இங்கு வந்ததை நான் பார்த்தேன். அவர்தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கூறி சமாளித்து விட்டேன். இதனையடுத்து ஷேர் மார்க்கெட்டில் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. சமாளிக்க முடியாத நிலையிலிருந்த நான் மீண்டும் தீபா வீட்டில் மீண்டும் தீபாவின் நகைகளை திருடுவது என பிளான் போட்டேன்.

தீபா தினமும் காலையில் தனது மகனை பள்ளியில் விட்டு விட்டு பின்னர் கார் டிரைவிங் கற்றுக்கொள்வதற்காக வெளியே சென்று விடுவார். அந்த நேரத்தில் திருடலாம் என நினைத்து நேற்று கார் டிரைவிங்குக்காக வெளியே சென்று விட்டார். உடனே நான் அவரது வீட்டுக்கு சென்றேன். மிதியடிக்கு கீழே இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோ பூட்டப்பட்டு இருந்தது சாவியை காணவில்லை. அதற்குள்தான் நகை இருக்கும் என்று கருதி அதற்கான சாவி எங்கு இருக்கிறது? என அங்கும் இங்கும் தேடி கொண்டிருக்கும் போதே எதிர்பாராத வகையில் தீபா திடீரென வீட்டுக்கு வந்து விட்டார். வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே வந்த அவர் என்னை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். நானும் செய்வதறியாமல் திணறிப் போனேன். ஏன் வீட்டுக்குள் வந்தாய்? என கேட்டு கூச்சலிட தொடங்கினார். நான் உடனே தீபாவின் வாயை பொத்தினேன். அருகில் மாத்திரை பாட்டில் இருந்தது. அதில் இருந்த மாத்திரைகளை ஒட்டு மொத்தமாக வாய்க்குள் கொட்டினேன். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். தயவு செஞ்சி என்னை விட்டு விடு என்று தீபா கெஞ்சினார். காட்டி கொடுத்து விடுவார் என்ற பயம் பயத்தில் தீபாவின் தலையை பிடித்து சுவரில் பல முறை மோத செய்தேன். தீபா மகனுடைய ஜியோமெட்ரிக் பாக்ஸ் அருகில் இருந்தது. அதற்குள் இருந்த காம்பசை எடுத்து அதன் முனையால் தீபாவை தலை மற்றும் உடலில் பல முறை குத்தினேன். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிர் இழந்தார்.

உடனே, சாவியை எடுத்து மறுபடியும் வீட்டை பூட்டி அரும் பார்த்தபுரம் ரெயில்வே பாலம் கட்டும் இடத்துக்கு வந்த நான் அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாவியை வீசினேன். பின்னர் வில்லியனூர் சென்று சினிமா பார்த்தேன். கொலை செய்தது நான்தான் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து வீட்டுக்கு திரும்பினேன். என கூறினார்.