Asianet News TamilAsianet News Tamil

மே.வங்கம்: துணை ராணுவப்படைகளை வாபஸ் பெற நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Calcutta High Court Stays Withdrawal of Central Forces from Darjeeling After West Bengal Plea
Calcutta High Court Stays Withdrawal of Central Forces from Darjeeling After West Bengal Plea
Author
First Published Oct 18, 2017, 8:37 AM IST


மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் பகுதியில் இருந்து துணை ராணுவப் படைகளை வாபஸ் பெறுவதற்கு கோல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வரும் அக்.23ஆம் தேதி அன்று, மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.  அதே நேரம், அக்.26ம் தேதி இதற்கு பதிலளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டது.

கோல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, வரும் 27-ஆம் தேதி வரை துணை ராணுவப் படையினரை வாபஸ் பெற இயலாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  மேற்கு வங்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கோல்கத்தா உயர் நீதிமன்றம், இத்தகைய உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்துள்ளது.

கோர்க்கா பிரச்னையால் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது டார்ஜீலிங். இங்கே, டார்ஜீலிங் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களை சேர்த்து, கோர்க்காலாண்ட் என அந்தப் பகுதியை தனி மாநிலமாக உருவாக்குமாறு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி, பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, அங்கே பதற்றத்தைத் தணிக்க ஏற்பாடு செய்தது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஓரளவு தணிந்துள்ளது.

இந்நிலையில், அதைக் காரணம் காட்டி, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரில் பெரும்பாலானோரை மத்திய அரசு வாபஸ் பெற்றது. 15 மத்திய ஆயுதப் பட்டை பிரிவில் பத்து பிரிவினரை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்தது.  பண்டிகைக் காலம் என்பதால், வேறு நகரங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதாக மத்திய அரசு கருதியது. ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

டார்ஜீலிங் பகுதியில் இன்னமும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. எனவே, இந்த வருட இறுதி வரை துணை ராணுவத்தை வாபஸ் பெறக் கூடாது; நிலைமை சீரடையாதவரை மத்திய அரசு எப்படி பத்து பிரிவினரை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சி செய்யலாம் என்று கூறியது மேற்கு வங்க அரசு. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. 

இந்நிலையில், அண்மையில் ஜிஜேஎம் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைக் கூறி,  கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மனு ஒன்றை அளித்தது. அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த போது நீதிபதிகள் ஹரீஷ் டாண்டன், தேபங்ஷூ பாசக் ஆகியோர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதில்,  
டார்ஜீலிங் பகுதியில் துணை ராணுவப் படையினரை வாபஸ் பெறும் நடவடிக்கைக்கு அக்.27-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம், இந்த விவகாரத்தை பண்டிகை விடுமுறைக்குப் பிறகு கோல்கத்தா உயர் நீதிமன்ற அமர்விடம் முறையிடுமாறு மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios