ரூ.17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், ஜூலை முதல் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2028 வரை நடைமுறையில் இருக்கும், இதற்காக ரூ.17,082 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை டெல்லியில் இன்று கூடியது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா மற்றும் பிற நலத்திட்டங்கள் உள்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை முதல் விநியோகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது வரும் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் நடைமுறையில் இருக்கும். மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.17,082 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்புச்சத்து, ஃபோலிம் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகை போன்ற தீவிர பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது.
வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு மார்ச் 2024ஆம் ஆண்டிற்குள்ளாக நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க முடிவு செய்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அரசின் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான இலக்கு முழுவதும் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பான நடவடிக்கையாக உலகளவில் உணவு வலுவூட்டல் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், 65 சதவீத மக்கள் அதை முக்கிய உணவாக உட்கொள்வதால், நுண்ணூட்டச் சத்துக்களை வழங்குவதற்கு அரிசி ஒரு சிறந்த மாற்றமாக உள்ளது. நெல் செறிவூட்டலில் FSSAI ஆல் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளின்படி நுண்ணூட்டச் சத்துக்களால் (இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12) செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை வழக்கமான அரிசியுடன் சேர்ப்பது ஆகும்.