வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டிக்கு சற்று குறைவாக பாஜக கூட்டணி இடங்களைப் பிடிக்கும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட கையோடு சி வோட்டர்  நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. இந்தக் கருத்துக்கணிப்பில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 264 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் 220 இடங்களை வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் 44 இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, பிஜூ ஜனதாதளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்கள் கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்திருந்த நிலையில், இந்த முறை 86 இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, திரினாமூல் காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைந்தாலும் 226 இடங்களை மட்டுமே எட்டிப் பிடிக்க முடியும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 31.1 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 30.9 சதவீத வாக்குகளையும் பிற கட்சிகள் 28 சதவீத வாக்குகளையும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.