நாடு முழுவதும் 48 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்! பாஜகவை முந்தியதா காங்கிரஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதி!
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. உத்தரபிரதேசத்தில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும், கர்நாடகாவில் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடத்தப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பீகார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
48 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்:
* உத்தர பிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதில் மீராப்பூர் தொகுதி - ராஷ்டீரிய லோக் தளம், குண்டார்கி தொகுதி - பாஜக, காசியாபாத் தொகுதி - பாஜக, கைர் தொகுதி - பாஜக, காரல் தொகுதி - சமாஜ்வாடி கட்சி, சிசாமாவ் தொகுதி - சமாஜ்வாடி கட்சி, புல்புர் - பாஜக, காத்தேகாரி - பாஜக, மஜாவான் தொகுதி - பாஜக, கேதர்நாத் தொகுதி - பாஜக வெற்றி பெற்றுள்ளது. 9 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7ல் வெற்றி பெற்றுள்ளது.
* ராஜஸ்தான் மாநிலத்தில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜுன்ஜுனு தொகுதி - பாஜக, ராம்கார் தொகுதி - பாஜக, தவுசா தொகுதி - காங்கிரஸ், டியோலி யுனியரா தொகுதி - பாஜக, கின்ஸ்வார் தொகுதி - பாஜக, சாலும்பெர் தொகுதி - பாஜக, கோரசி தொகுதி - பாரத் ஆதிவாசி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
* மேற்கு வங்க மாநில இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
* அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 5 தொகுதிகளில் நான்கு தொகுகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
* பீகார் மாநிலத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலில் தராரி தொகுதி - பாஜக, ராம்கார் தொகுதி - பாஜக வெற்றி பெற்றுள்ளது. இமாகாஞ் தொகுதி - ஹிந்துஸ்தானி அவார்ம் மோச்சா வெற்றி, பெலகாஞ்சி தொகுதி - ஜனதா தளம் வெற்றி
* பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
* கர்நாடகா மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த சண்டூர், ஷகான், சென்ன பட்னா ஆகிய 3 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றள்ளது.
* கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூததில் 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்றொரு தொகுதியான செலக்கராவில் ஆளும் கட்சியான சிபிஎம் வேட்பாளர் யூ ஆர் பிரதீப் 12,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் விஜயாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், புத்னி தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
* சிக்கிம் மாநிலத்தில் நடந்த 2 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோச்சா கட்சி சோரெங் தொகுதி மற்றும் நம்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
* மேகாலயா காம்பெக்ரே தொகுதி - தேசிய மக்கள் கட்சியும், சத்தீஸ்கர் ராய்ப்பூர் தெற்கு தொகுதியில் பாஜகவும், குஜராத் வேவ் தொகுதியில் பாஜகவும், உத்தரகாண்ட் கேதர்நாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.