Businessman VijayMallya granted bail after brief arrest

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று மாலை லண்டனில் கைது செய்யப்பட்ட அடுத்த ஒருமணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கியது லண்டன் நீதி மன்றம்.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். இவருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றம், கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

மேலும், மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியும், தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ அமைப்பும், மத்திய அமலாக்கப்பிரிவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 18-ந்தேதி மல்லையாவை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனார். ஆனால், சில மணி நேரங்களில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

அதன்பின் மல்லையாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்களில் கடனாகப் பெற்ற ரூ.6ஆயிரம் கோடியை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளில் மல்லையா முதலீடு செய்ததாக கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, மல்லையாவுக்கு எதிராக இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரகை தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீசார் இன்று கைது செய்தனர். அவர் கைதான அடுத்த ஒரு மணிநேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கியது.