ஆந்திராவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமில்லி பகுதியில் இருந்து சிந்துரு பகுதிக்கு ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். அதில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. வால்மீகி கொண்டா பகுதி அருகே வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும், மீட்டு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.