Budget filing in November - The central government decision to change the fiscal year

2018ம் ஆண்டு முதல் நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 150 ஆண்டுகளாக நிதியாண்டு என்பது ஏப்ரல் முதல் மார்ச் வரை என்ற முறை மாற்றப்பட உள்ளது. 

இதையடுத்து, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டைமுன்கூட்டியே வரும் நவம்பர் மாத்திலேயே தாக்கல் செய்யப்படலாம் என அரசு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மோடி ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து நிதியாண்டை மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு மாற்றியது. இதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நவம்பரில் பட்ஜெட் தாக்கல் 
நிதியாண்டை மாற்றுவது தொடர் பான சட்ட வரைவு குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை டிசம்பர் மாதத்துக்கு முன்பு முடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
இப்போதைய நடை முறைகளின்படி பட்ஜெட்தொடர்பான செயல் முறைகள் முடிவதற்கு இரண்டு மாத காலம் ஆகிறது.

எனவே, நிதி ஆண்டுமாற்றப்படும் பட்சத்தில் வரும் நவம்பர் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 ஆண்டு காலநடைமுறை
இப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1867-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.

பரிந்துரைகள்
நிதியாண்டையும் காலண்டர் ஆண்டையும் இணைப்பதற்கு மோடி விருப்பம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை நியமித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.

இதுபோல நிதி ஆண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற நிதி நிலைக்குழு நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றுவதற்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலையே முதல்முறை

நம் நாட்டிலேயே முதன் முறையாக, மத்தியபிரதேசமாநிலம் ஜனவரி முதல் டிசம்பர் வரை என நிதியாண்டை ஏற்கெனவே மாற்றியிருக்கிறது. இது 2018-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.