மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்(பி.எஸ்.என்.எல்.) அடுத்த ஆண்டில் ஆயிரக்கணக்காண ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது அந்த நிறுவனத்தில் ஏறக்குறைய 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் ஊழியர்கள் இருக்கும் நிலையில் இதில் 7 சதவீதம் பேரை குறைத்து, ஒரு லட்சத்து 96 ஆயிரமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதிக்குள் இந்த ஆட்குறைப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்ட நிலையிலும், வி.ஆர்.எஸ். திட்டத்தில் ஓய்வு பெறுபவர்கள் இருப்பதால், புதிதாக பணியாளர்கள் யாரையும் எடுக்க திட்டம் ஏதும் இல்லை. ஆதலால், இந்த ஆள்குறைப்பு முடிவு எனத் தெரிகிறது.
இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ஸ்ரீவஸ்தவா, “ ஒவ்வொரு ஆண்டு 10 சதவீதம் ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடத்துக்கு புதிதாக ஆள்நியமிக்க வேண்டும். ஆனால், நியமிக்கப்போவதில்லை. ஏனென்றால், நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க இது உதவியாக இருக்கும்'' எநத் தெரிவித்தார்.

2018-19-ம் ஆண்டுக்குள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஆள்குறைப்பு, சொந்தமான நிலத்தை விற்பனை செய்தல், அலைக்கற்றை விற்பனை ஆகியவற்றை செய்துவருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது உள்ள பி.எஸ்.என்.எல். 22 வட்ட அலுவலங்களில், ஆந்திராவில் மட்டுமே அதிகபட்சமாக 22 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வருவாயில், 50 சதவீதத்தை ஊழியர்களின் ஊதியத்துக்காக செலவிடுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி ஊதியத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
இதுவே வோடபோன், பார்தி ஏர்டெல், ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயில் அதிகபட்சமாக 8 சதவீதத்தை மட்டுமே பணியாளர்கள் ஊதியத்துக்காக செலவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
