கர்நாடகா புதிய பாஜக தலைவர்: எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம்!
கர்நாடகா மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்தது. இதையடுத்து, அம்மாநில பாஜக தலைவர் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா (47) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்த நளின் குமார் கட்டீல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜகவின் 10ஆவது தலைவராக பொறுப்பேற்கவுள்ள விஜயேந்திராவின் நியமனம், கட்சிக்குள் எடியூரப்பாவின் செல்வாக்கை காட்டும் வகையில் உள்ளது. அத்துடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற விஜயேந்திரா, திறமையான தலைவராகவும் கருதப்படுகிறார்.
பெரிய காலேஜ்ல படிக்கல; சம்பளம் ரூ.60 லட்சம்: இந்தியாவின் டாப் கோடிங் பெண்!
தேர்தல் அரசியலில் இருந்து விலகிய பி.எஸ்.எடியூரப்பா, ஆட்சியை தக்கவைக்க உதவும் வகையில் சட்டசபை தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பாஜகவுக்காக பரவலாக பிரசாரம் செய்தார். மேலும், தனது மகனுக்காக ஷிகாரிபுரா முழுவதும் பிரச்சாரம் செய்த அவர், தனது மகனை பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைக்குமாறு தொகுதி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். ஷிகாரிபுரா தொகுதி ஒருகாலத்தில் எடியூரப்பாவின் கோட்டையாக இருந்தது.
லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கர்நாடக மாநிலத் தலைமையை பாஜக மேலிடம் வழங்கும் என எதிர்பார்த்ததுதான். ஆனால், சீனியர்கள் பலர் இருக்க முதன்முறை எம்.எல்.ஏ.வான விஜயேந்திராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா மக்களவை எம்.பி.யாக உள்ளார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை அரசியலில் ஊக்குவிப்பதை தவிர்த்து வருவதாக பாஜக அடிக்கடி கூறுவது நினைவுகூரத்தக்கது.