மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம்.  இன்று மாலை வேலை முடிந்து  ஏராளமான பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர். முதலில்  20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

உடனடியாக அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.

 காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே 5 பேர் இந்த விபத்தில் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாகனங்கள் அவ்வழியாக செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலையில் மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது என்றும் கூறப்படுகிறது.