bride left groom in marriage

மணமேடையில் குட்கா தின்று கொண்டிருந்த மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று உதறிய தள்ளிய மணப்பெண்ணால் திருமணம் பாதியில் நின்றுபோனது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம், பல்லியா மாவட்டம் முரார்பட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், டலன் சபாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி லால்கஞ்ச் கிராமத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

திருமண விழாவின்போது, இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். திருமண சடங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும்போதுதான், மணமகள், மணமகனைக் கவனித்துள்ளார்.

அப்போது, மணமகன், குட்காவை மென்று கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் தாலி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. குட்கா மென்று கொண்டிருந்த மணமகனை பார்த்த மணமகள் கோபமடைந்தார்.

இதையடுத்து, தாலி கட்ட மணமகளை நெருங்கியுள்ளார் மணமகன். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில், மணமகனின் கையை தட்டிவிட்டு, மணமேடையை விட்டு இறங்கினார் மணமகள்.

இதனால், திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணமகளின் உறவினர்கள் கேட்டபோது, குட்கா தின்கிற இவனை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த திருமணம் தடைபட்டது.