bride groom stops the marriage because there is no non-veg in marriage

உத்தரப்பிரதேசம், முசாபர்நகர் மாவட்டத்தில் திருமணத்தில் கறிவிருந்து இல்லாத காரணத்துக்காக திருமணத்தை நிறுத்தி மணமகன் நடையைக் கட்டினார்.

ஆனால், திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த விருந்தினர் ஒருவர் சைவச் சாப்பாடு இருந்தால் போதுமானது எனக் கூறி மணப்பெண்ணை திருமணம் செய்தார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் பா.ஜனதா சார்பில் கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்து வருகிறார். அதில் முக்கியமானது சட்டவிரோதமாகச் செயல்படும் இறைச்சிக் கடைகளை மூடுவதாகும்.

இதனால், மாநிலத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த ஏராளமான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. இறைச்சி முக்கிய உணவாக குறிப்பிட்ட வகுப்பு மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவால் மாடு, ஆடு, கோழி இறைச்சுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முசாபர்நகர் மாவட்டம் குல்ஹேதி கிராமத்தில் நேற்று முன் தினம் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமணத்துக்காக மணப்பெண், மணமகன் என இருவீட்டாரும் வந்து கூடியிருந்தனர்.

ஆனால், திருமணத்தில் கறிவிருந்து பரிமாற வேண்டும் என்பது மணமகன் குடும்பத்தினரிடம் கட்டளையாகும். ஆனால், இறைச்சிக்கு பெரிய தட்டுப்பாடு இருப்பதால், சைவ உணவை மணமகள் வீட்டார் பரிமாறினர். இதனால், ஆத்திரமடைந்த மணமகனும், அவரின் குடும்பத்தினரும், திருமணம் நடக்காது எனக்கூறி நடையைக் கட்டினர்.

இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களும், பஞ்சாயத்து தலைவரும் வந்து மணமகன் வீட்டாருடன் சமாதானத்தில் ஈடுபட்டு, நிலைமையை விளக்கி கூறினர். ஆனால், எந்த சமாதானத்தையும் ஏற்காத மணமகன் கறிவிருந்துதான் வேண்டும், இல்லாவிடில் திருமணம் செய்யமுடியாது என ‘கராராக’ கூறிவிட்டு வௌியேறினார்.

இதனால், மணப்பெண் வீட்டார் மணமுடைந்தனர். ஆனால், திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒருவர் மணப்பெண்ணை திருமணம் செய்ய முன்வந்து பஞ்சாயத்து தலைவரிடமும், மணப்பெண் குடும்பத்தாரிடம் பேசினார். அவர்கள் ஏற்றுக்கொள்ளவே அந்த திருமணம் சைவ உணவு விருந்துடன் நடந்தது.

எகிறிப்போனது இறைச்சி விலை..

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத இறைச்சிக் கடைகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இறைச்சி விலை உயர்ந்துள்ளது. மாட்டிறைச்சி கிலோ ரூ.150லிருந்து ரூ.400 ஆக அதிகரித்துள்ளது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.350லிருந்து ரூ.600 ஆகவும், கோழி இறைச்சி ரூ.260க்கும் விற்பனையாகிறது