Bride and groom call off wedding because of fight over PM Narendra Modi
பிரதமர் மோடி குறித்து மணமகன், மணப்பெண்ணுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, திருமணம் ரத்துசெய்து விட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்தனர்.
நமது அன்றாட வாழ்க்கையில் ஆளும் மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி அறிவிக்கும் கொள்கைகள் குறித்தும் மக்களிடையே விவாதங்கள் நடப்பது இயல்பு. இதில் ஒருதரப்பு பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் வாதிடுவார்கள். இது பொது வாழ்க்கையில் இந்த அரசியல் விவாதம் முடிவில்லாமல் நாள்தோறும், டீக்கடை முதல் ஓட்டல் வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், பாதிப்பு ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
ஆனால், இதே விவாதம் குடும்பத்தில் ஏற்பட்டு அந்த குடும்பமே இரண்டாகப் பிரிந்தால் எப்படி இருக்கும். அதுதான் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்துள்ளது. கான்பூரைச் சேர்ந்த ஒரு வர்தத்கருக்கும், அரச ஊழியரான ஒரு பெண்ணும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத் தேதி குறிப்பட்டது.
இதையடுத்து, திருமணத்துக்கு செலவாகும் தொகையை எப்படி பிரித்துக் கொள்ளலாம் என்பது குறித்துப் பேச மணமகள், மணமகன் குடும்பத்தார் கான்பூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சமீபத்தில் வந்துள்ளனர். இரு குடும்பத்தாரும், திருமணச் செலவு, சமையல், புடவை எடுத்தல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தீவிரமாக ஒருபுறம் ஆலோசித்துக் கொண்டு இருந்தனர்.
கோயிலின் ஒருபுறம், மணமகனும், மணமகளும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். நாட்டில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களை மிகவும் பாதித்துள்ளது. இதனால், சமானிய, நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள், மோடியின் பொருளாதார கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துவிட்டது என்று அரசு ஊழியரான அந்த மணப்பெண் கூறியுள்ளார்.
இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த வர்த்தகரான மணமகன் பிரதமர் மோடியின் “ பொருளாதாரக் கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கிறது. ஊழல் குறைந்துள்ளது என்று மோடிக்கு ஆதரவாக” அவர் பேசியுள்ளார். மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் காரசாரமாக விவாதிக் கொண்டனர். இதில் மணமகன், மணப்பெண் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து, திருமணத்தில் இருவருக்கும் விருப்பமில்லை என்று தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். ஆனால், திருமணச்செலவு குறித்து ஆலோசித்துக்கொண்டு இருந்த இரு குடும்பத்தாரும், மணமக்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய தீவிரமாக முயற்சித்தும் மணமக்கள் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, குறித்த திருமணத் தேதியை ரத்து செய்து, திருமணத்தையும் நிறுத்தி இருதரப்பினரும் வருத்தத்தோடு பிரிந்தனர்.
இதுகுறித்து ஆங்கில நாளேடு ஒன்று, மணமகள்,மணமகன் பெயர் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது.
