கேரளாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஒரு லி்ட்டர் 'மினரல் வாட்டரை'(சுத்திகரிக்கப்பட்டகுடிநீர்) 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பி. திலோத்தமன் நிருபர்களுக்கு திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில், " குடிநீர் பாட்டில் விலையை வர்த்தகர்கள் தங்கள் விருப்பப்படி விலையில் விற்பனை செய்கிறார்கள், வரைமுறையின்றி விலை வைக்கப்படுகிறது என்று மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வந்தன. இதையடுத்து, குடிநீரை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயனும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி அடுத்த இருநாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இனிமேல் மாநிலத்தில் எந்த வர்த்தகரும், கடைக்காரரும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலையை ரூ.13-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. மக்களின் குடிக்கும் குடிநீருக்கு அதிகவிலை வைக்கப்படுவதால் அதைக் கட்டுக்குள் கொண்டுவர இருக்கிறோம். அனைத்து குடிநீரும் பிஎஸ் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாத நிறுவனங்களையும் மூடப்போகிறோம் " எனத் தெரிவித்தார்.