bomb powder in UP assembly
உத்தரபிரதேசத்தில், இன்று சட்டப்பேரவையில் பாதுகாப்பு சோதனையின்போது, எதிர்கட்சி தலைவரின் இருக்கையின் கீழ் PETN என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த பகுதியான சட்டப்பேரவையில் சக்தி வாய்ந்த வெடி மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான சட்டமன்றத்துக்குள் PETN வெடி பொருள் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சட்டப்பேரவை வளாகம், போலீஸ் வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவைக்குள்ளும் அதன் அருகிலும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச முதலமைச்சரான யோகி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாலும், சர்ச்சைக்குரிய தலைவராக கருதப்படுவதாலும் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

உத்தரபிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாகவே பல இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அமர்நாத் யாத்ரிகர்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக குஜராத், உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று PETN என்ற சக்தி வாய்ந்த வெடி பொருள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவையில் வெடி பொருளை வைத்தது யார்? பாதுகாப்பை மீறி எப்படி கொண்டு வரப்பட்டது? என்பது குறித்த கேள்விக்கு போலீசாரிடம் பதிலேதும் இல்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதிவேலை காரணமாக வெடி பொருள் வைக்கப்பட்டதா? எதிர்கட்சி தலைவரின் இருக்கைக்கு கீழ் வெடி மருந்து கைப்பற்றப்பட்டதற்கான பின்னணிகள் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உ.பி. சட்டப்பேரவையில் வெடி மருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
