சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, “டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இந்திய நகரங்களில் குண்டு வெடிக்கப்போகிறது.  நீங்கள் அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதற்றமான குரலில் பேசினார்.
 
இதைக் கேட்டதும் போலீசாருக்கு கிறுகிறுத்துப் போனது. உஷாரானார்கள். அழைத்துப் பேசிய ஆசாமி, தான் யாரெனச் சொல்லவில்லை. எனினும் அவர் அழைத்த எண் மூலம் அவரைக் கண்டுபிடித்தனர். 

சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அந்த ஆசாமி சொன்ன தகவல் தான் போலீசாருக்கு துாக்கி வாரிப்போட்டது. 

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குண்டு வெடிக்கும் என்ற தகவலை யு ட்யூப் ஜோதிடர் ஒருவர் சொன்னதன் அடிப்படையில் தான் சொன்னதாகக் குறிப்பிட்டார், அந்த ஆசாமி. 


போலீசார் அவரைக் கடுமையாக எச்சரித்ததோடு, மன்னிப்புக் கடிதமும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பினர். இச்சம்பவம் தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எத்தகைய வேடிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்கின்றனர், போலீசார்.