காங்கிரசுக்கு தீராத தலைவலியாக உள்ள போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை மத்திய அரசு மீண்டும் விசாரிக்க உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜீவ் பிரதமராக இருந்த போது, போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இந்துஜா சகோதரர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அப்போதைய மத்திய அரசு அனுமதி தராதது, சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, லண்டன் வங்கியில் இருந்த பல கோடி ரூபாயை, காங்., தலைவர் சோனியாவின் உறவினர் குட்ரோச்சி எடுத்து சென்றது போன்ற விஷயங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

நாடாளுமன்ற பொது கணக்கு குழுவிற்கு ஒரு துணை பிரிவு உண்டு. மத்திய அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களை இந்த குழு விசாரித்து வருகிறது. இந்த குழு தான் இந்துஜா சகோதரர்கள் விவகாரம், குட்ரோச்சி விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சகம் மற்றும் சி.பி.ஐ.,க்கு கேள்வி எழுப்பி இருந்தது.

இந்துஜா சகோதர்கள் மீது விசாரணை தொடரக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம், 2005ம் ஆண்டு மே 31-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையிடம் சி.பி.ஐ., ஆலோசனை கூறியது.

ஆனால், அப்போது மத்திய அமைச்சர் பரத்வாஜ் தலைமையிலான மத்திய சட்ட அமைச்சகம் அப்பீல் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி தரவில்லை. எனினும், வழக்கறிஞர் அஜய் குமார் அகர்வால் என்பவர் இதுபோன்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

போபர்ஸ் வழக்கில், குட்ரோச்சி லஞ்சம் வாங்கி இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், லண்டனில் உள்ள பி.எஸ்.ஐ., - ஏ.ஜி., வங்கியில் குட்ரோச்சி கணக்கில் இருந்த 3 மில்லியன் டாலர் பணத்தை முடக்கும்படி, 2006ம் ஆண்டு ஜன., 16ல் உத்தரவிட்டது.

ஆனால், இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள், பிரிட்டன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் முன், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட ஜன., 16ம் தேதியே குட்ரோச்சி வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டதாக இன்டர்போல் அமைப்பு ஜன., 19ல் தெரிவித்தது.

இந்த விஷயத்தை பார்லி நிலைக்குழுவிடம் ராணுவ அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பார்லி நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.